Monday, November 22, 2010

சிலபசை தயாரித்த பிளஸ் 2 மாணவர்

இன்டர்நெட் பாதுகாப்பு குறித்த பாடத்திட்டத்தை தயாரித்து, பெங்களூரு மாணவன் சாதனை புரிந்துள்ளார். இந்த பாடத்திட்டம் விரைவில் அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெங்களூருவில் உள்ள இன்டஸ் சர்வதேச பள்ளியில், பிளஸ் 2 படித்து வரும் மாணவர் சவுர்யா சலுஜா (17). பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களிலும், இன்டர்நெட்டிலும் மாணவர்கள் மூழ்கிக் கிடப்பதையும், இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையும், கண்கூடாக பார்த்த சலுஜாவிற்கு, இதுகுறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எண்ணம் துளிர்விட்டது. இதை தொடர்ந்து, இன்டர்நெட் பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளை அடிப்படையாக வைத்து, பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் சுறுசுறுப்பாக களமிறங்கினார். தனது எண்ணத்துக்கு உயிர் கொடுக்க, பஞ்சாபை சேர்ந்த இன்டர்நெட் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் உதவியை நாடினார். அங்கு இன்டர்நெட் பாதுகாப்பு குறித்து இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்ற சலுஜா, பெங்களூரு திரும்பியதும் இன்டர்நெட் பாதுகாப்பு பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக களமிறங்கினார். இன்டர்நெட் நன்னெறிகள் (சைபர் எத்திக்ஸ்), வலைதளங்களும் நீங்களும் (நெட்வொர்க்ஸ் அண்ட் யூ), இன்டர்நெட் தற்காப்பு (புரோக்டெக்டிங் யுவர்செல்ப்), இன்டர்நெட் சட்டங்கள் (சைபர் லாஸ்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் பாடத்திட்டங்களை தயாரித்தார். இந்த பாடத்திட்டத்தை அவர் படிக்கும் இன்டஸ் சர்வதேச பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்தது. பின் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இன்டர்நெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒன்பது முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இந்த பாடத்திட்டத்தை சேர்க்க முடிவு செய்து, விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுர்யா சலுஜா கூறியதாவது: நான் மலேசியாவில் படித்து கொண்டிருந்த போது, இதுபற்றிய பலர் என்னிடம் பேசுவர். இதனால் அங்கு மாணவர்களிடையே விழிப்புணர்வு அதிகம். ஆனால் இங்கு இன்டர்நெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களிடம் யாரும் பேசுவதில்லை. எனவே இதை பாடத்திட்டமாக தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அனைத்து பள்ளிகளிலும் இதை பாடத்திட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு சலுஜா கூறினார்.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...