இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத பிராமணர்கள் தங்களை ஒரு தனிமதமாகக் கூறிக்கொண்டு சைவம் + வைணவம் + ஸ்மார்த்தம் ஆகியவை இணைந்ததே "ஹிந்து மதம்" என்றும் இந்த ஹிந்து மதத்திற்கு தாங்களே தலைமை என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால், சைவ மடங்கள் பிராமணர்களின் தலைமையை ஏற்பதில்லை. அனைத்து சைவ மடங்களின் ஆதீனங்களும் (ஸ்மார்த்த) பிராமணர்கள் அல்லாதவர்களே.
ஆனால், வைணவத்துக்குள் ஸ்மார்த்த பிராமணர்கள் படு வேகமாக ஊடுருவினர்.
ஸ்மார்த்த பிராமணர்களைப் பொறுத்தவரை "வேதம்"தான் அவர்களின் அடிப்படை, ஆசான், கடவுள் எல்லாம்.
வேதம் யாரால் உருவாக்கப்பட்டது ? வேறு யாரால் ...அவர்களால்தான் அதாவது வட வேத ஸ்மார்த்த பிரமணர்களால்தான்.
அந்த வேதத்தின் அடிப்படை என்ன ?
சுருக்கமாகச் சொன்னால்..."இந்த உலகம், பேரண்டம் உள்ளிட்ட எல்லாம் கடவுளுக்குள் அடக்கம். அந்தக் கடவுள் பிராமணரின் வேத மந்திரத்துக்குள் அடக்கம்" என்பதே.
ஆக...பிராமணர்களாகிய தாங்கள்தான் கடவுள் என்பதே.
இதே தன்மையில்தான், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று மானுடத்தின் உயர்ந்த இடத்தில தாங்களே இருக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என்றும் கட்டமைத்தனர். ஆனால், சைவம், வைணவம் உண்மையில் பிற்காலத்தில்தான் மதங்களாக ஆகின, தொடக்கத்தில்,
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
எனும் தொல்காப்பியம் கூறும் காடும் காடு சார்ந்த இடங்களில் வசித்த மக்களின் கடவுள் "மாயோன்" என்றும் மலையும் மலை சார்ந்த இடங்களில் வசித்த மக்களின் கடவுள் "சேயோன்" என்றும் வழிபட்டு வந்துள்ளனர்.
இதில் மாயோன் வழிபாடுதான் பின்னர் வைணவமாகவும், சேயோன் வழிபாடு சிவனிய சைவமாகவும் உருவெடுத்து...சமண பவுத்தர்கள் இங்கே காலூன்றித் தழைத்து வளர்ந்தபோது இவை இரண்டும் மதங்களாகக் கட்டமைக்கப்பட்டன.
இவ்வாறு கட்டமைத்தவர்கள் வேறு யாருமல்ல வட வேத ஸ்மார்த்த பிராமணர்கள்தான்.
தங்களைத் தற்காத்துக்கொள்ள ஸ்மார்த்த பிராமணியத்தை சைவ வைணவத்துடன் இணைத்து, அரசர்களுடன் நெருக்கம் வைத்து வைத்தே இந்த வேலைகளையெல்லாம் செய்தார்கள் இவர்கள்.
சைவம் - வைணவம் ஆகிய இரண்டும் தமிழில்தான் பத்தி இலக்கியங்கள் படைத்தன என்பதிலிருந்து அவை தமிழர் நெறிகளாகவே இருந்தன என்பது உறுதியாகிறது.
இதில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் தனித்தமிழ் பத்தி இலக்கியமே வைணவத்தின் புனித நூல்.
வட வேத ஸ்மார்த்த பிராமணர்களின் ஊடுருவல் காரணமாக தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு சமஸ்க்ருதம் முன் நிறுத்தப்பட்டது, வைணவர்களின் தனித்தமிழ் பத்தி இலக்கியம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வேதம் முன் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான், ஸ்ரீபெரும்புதூர் எனும் திருப்பெரும்புதூரில் இராமானுஜர் பிறக்கிறார். ஒரு குருநாதரிடம் பாடம் கற்றுக்கொள்ளச் சென்ற போது அவர் கொடுத்த விளக்கம் அபத்தமாக இருக்க மறுத்து வாதிடுகிறார். பிறகு குருவை விட்டு விலகுகிறார்.
அந்தக் குருவே சக சீடர்களை வைத்து இராமானுஜரைக் கொ*லை செய்ய முயற்சிக்கிறார்.
தனித்தமிழ் வைணவத்தில் சம்ஸ்கிருத ஊடுருவல், வேத ஊடுருவல்...இவை ஏற்படுத்திய சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவை மேலும் இராமானுஜரைக் கடும் கோபத்திற்கு ஆளாக்குகின்றன.
இராமானுஜரை தீர்த்துக்கட்ட பல முயற்சிகள் நடக்கின்றன. விளைவு தலைமறைவாக வாழவேண்டிய நிலை. இவர் தலைமறைவாய் வாழ்ந்த இடத்தில் இவருக்கு உணவு கொடுத்து, அணிவிடை பணிவிடை செய்தவர் ஒடுக்கப்பட்ட குடியைச் சேர்ந்தவர்.
அதன்பிறகுதான் தமிழர் ஆதிக் குடிகளுக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்து அதில் உள்ள தவறுகளை வாதிடும் திறனைக் கற்றுக்கொடுத்து, தனித்தமிழ் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தையும் கற்றுக்கொடுத்து, அவர்களுக்குப் பூணூல் அணிவித்து, நெற்றியில் திருநாமமும் இட்டு ஒரு பெரும் சமூகப் புரட்சி செய்கிறார் இராமானுஜர்.
உடனே வட வேத ஸ்மார்த்த வைணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, பஞ்சாயத்து அரசரிடம் செல்கிறது.
இராமானுஜர் ஒன்றே ஒன்று மட்டும் சொன்னார்..."இவர்கள் எமது சொந்தங்கள். இவர்களும் ஸ்ரீரங்கம் எனும் திருவரங்கத்தில் உள்ளே சென்று வழிபட உரிமை படைத்தவர்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட உரிமை படைத்தவர்கள். வேண்டுமென்றால் வட வேத வைணவர்கள் யாராக இருந்தாலும் இவர்களிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்டு வாதம் செய்து வெல்லட்டும்" என்று.
வாத விவாதங்கள் நடக்கின்றன, இராமானுஜரின் படையணியை அசைத்துகூடப் பார்க்க முடியவில்லை வட வேத வைணவர்களால்.
அரசன், இராமானுஜரின் தமிழ் வைணவர்களுக்கு அனுமதி அளிக்கிறார்.
அப்போது வட வேத பிராமணர்கள் இறுதியாக ஒரு கோரிக்கை அரசரிடம் வைக்கிறார்கள். "இன்றிலிருந்து நாங்கள் "வடகலை" அவர்கள் 'தென்கலை". மேலும் நெற்றி நாமத்தை அவர்கள் மூக்கில் இறக்கி பெரிய அளவில் இடவேண்டும். அவ்வாறு இட்டால் அவர்கள் பூசை, வழிபாடு செய்யும் இடத்திற்கு வராமல் நாங்கள் ஒதுங்கிச் சென்றுவிடுவோம்" என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது.
அதனால்தான் நெற்றி நாமத்தைப் பெரிய அளவில் போட்டு சிலர் நெஞ்சு, வயிறு என்றெல்லாம் இட்டுக்கொள்வது வழக்கம்.
ஆக....தென்கலை வைணவர்கள் தமிழர்கள் அதிலும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பெருங்குடிமக்களடங்கிய வைணவர்கள். இவர்களின் புனித நூல் தனித்தமிழ் பத்தி இலக்கியங்கள்.
வடகலை வைணவர்கள் சம்ஸ்கிருத வட வேத பிராமணியர்கள்.
இதுதான்..தென்கலை வடகலையின் பின்னணி.
நெற்றியில் ஏற்றி நாமம் U வடிவில் இட்டிருந்தால் வடகலை, Y வடிவில் மூக்கில் இறக்கி நாமம் இட்டிருந்தால் தென்கலை.
குறிப்பு : 1800 ம் ஆண்டுகளில் இருந்து இன்றும் தென்கலை - வடகலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
No comments:
Post a Comment