Friday, April 18, 2025

இன்று எந்த செய்தியும் இல்லை....

நாம் வழக்கமாகக் கேட்கும் / பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸூமே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது ஏதாவது நடந்துகிட்டேதான இருக்கும்’ என்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு நாள் வந்தது. இப்போது இல்லை.. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி.



இந்த சம்பவம் நடந்தது லண்டனில். 24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள் ஏதும் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் செய்தியைத் தெரிந்துகொள்ள இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று தினசரிகள் மற்றொன்று ரேடியோ. பிபிசி ரேடியோ அப்போது லண்டனில் மிகப் பிரபலம். 1930 ஆம் ஆண்டுதான் பிபிசிக்கு முக்கியமான காலகட்டம். காரணம், அதுவரை நியூஸ் ஏஜென்சிகளிடம் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த பிபிசி, புதிதாக ஒரு நியூஸ்ரூம் செட்டப்பை அமைத்து சொந்தமாக செய்தி வெளியிடத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்திகள் அத்தனையும் பிபிசி வழியாக வெளியிட்டது. அரசாங்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் செய்தி சேகரிப்பவர்கள் பலரை வேலைக்கு வைத்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

1930, ஏப்ரல் 18 ஆம் தேதி, புனித வெள்ளியன்று பிரிட்டிஷ் அரசாங்கம் பற்றிய நியூஸ் ஒன்றைத் தான் அன்றைய மாலை நேரச் செய்தியில் வாசிப்பதற்காகத் தயார் செய்திருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் அந்த நியூஸ் மக்களை சென்று சேரக் கூடாது என்று நினைத்தது. அதனால் எல்லாப் பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு உடனே அந்தச் செய்தி வெளியிடாமல் தடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். 




புனித வெள்ளி காரணமாக அன்றைக்கு எல்லா பத்திரிக்கைகளும் விடுமுறையில் இருந்தது. ஈஸ்டர் விடுமுறை முடியும் வரை பத்திரிக்கைகள் வெளிவராது என்பதால், பிபிசிக்கு மட்டும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். துரதிஷ்டவசமாக அன்றைக்கு அந்த நியூஸை விட்டால் பிபிசியிடம் வேறு செய்தி இல்லை.

மாலை 6:30 மணி. செய்திக்காக எல்லோரும் பிபிசி ரேடியோவிற்கு காது கொடுத்து காத்திருக்க, செய்தி வாசிப்பவர் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. “Good Evening. Today is Good Friday. There is no news” அவ்வளவு தான். அதற்கு பிறகு செய்தி நேரம் முழுவதும் பியானோ இசை மட்டுமே ஒலித்தது. வரலாற்றில் அந்த நாள் இடம்பிடித்தது

Monday, April 14, 2025

தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் சமஸ்கிருதப் பெயர்?

தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களாலேயே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி என்பதை விவரிக்கிறது இந்தச் செய்திக் கட்டுரை...



தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஏப்ரல் 14ஆம் தேதி  நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திரை மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை ஆகவே தொடர்ந்து வருகிறது. தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுகளைக் குறிப்பிட பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பல்வேறு காலக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கலி வருடம், கொல்லம் வருடம் (கேரளத்தில் பயன்படுத்தப்படும் முறை. உதயமார்த்தாண்ட வர்மாவால் துவங்கப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. 823ஆம் ஆண்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்), விக்ரமாதித்ய வருடம் (விக்ரமாதித்ய மன்னரால் கி.மு. 57 துவங்கப்பட்டதாகக் கருதப்படும் வருடம்), சாலிவாகன சகாப்தம் (சாலிவாகனன் எனப்படும் சாதவாகன மன்னன் கி.பி. 78ல் துவங்கி வைத்த முறை), ஃபஸ்லி (அக்பர் அரியணை ஏறிய ஆண்டில் துவங்குவது. அறுவடையை மையமாகக் கொண்ட காலக் கணிப்பு முறை), ஹிஜ்ரி (இஸ்லாமிய காலக்கணிப்பு முறை) என்று நீளும் கணக்கீட்டு முறைகளில் இந்த சம்வத்சரம் எனப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையும் ஒன்றாக இருந்தது. இது தவிர, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற கணக்கீட்டு முறை தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2023ஆம் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054ஆம் ஆண்டாகும். 1972 முதல் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ ஆண்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்ற கணக்கீட்டு முறைகளுக்கும் சம்வத்சர முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்ற ஆண்டு முறைகள், தொடர்ச்சியான எண்களைக் கொண்டவை. ஆனால், இந்த சம்வத்சர முறை, எண்களுக்குப் பதிலாக 60 பெயர்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து அந்தப் பட்டியல் துவங்கும். இந்தப் பட்டியலில் முதல் பெயர் 'பிரபவ' என்று துவங்குகிறது. 'அக்ஷய' என்ற பெயரோடு இந்தப் பட்டியல் முடிவுக்கு வருகிறது.

வராகமிக்ரர் எழுதிய வானியல் நூலான பிருகத் சம்ஹிதையில்தான் (கி.பி. 505 - 587) முதன்முதலாக, இந்த 60 பெயர்களும் நாம் இப்போது பயன்படுத்தும் வரிசையில் காணப்படுகின்றன. சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டைக் குறிக்கிறது. ஆனால், 'வருஷ' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் 'சம்வத்சரம்' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் வித்தியாசம் உண்டு. 'வருஷம்' என்பது பூமியின் ஒரு சூரிய வருடத்தைக் குறிக்கிறது. ஆனால், 'சம்வத்சரம்' என்பது வியாழனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதாவது, ஒரு சம்வத்சர ஆண்டு என்பது 361.026721 நாட்களைக் கொண்டது. பூமியை அடிப்படையாகக் கொண்ட சூரிய ஆண்டைவிட, 4.232 நாட்கள் குறைவு. இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு 85 சம்வத்சர ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த 60 பெயர்களில் ஒன்று தாண்டிச் செல்லப்படும். அதாவது அந்த ஆண்டு 'பிரபவ' என்ற பெயர் சூட்டப்படவிருந்தால், அதற்கு அடுத்த பெயரான 'விபவ' என்ற பெயர் சூட்டப்படும். ஆனால், காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. சம்வத்சரமும் வருஷமும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பதாக மாறிவிட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கும்போது, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதனை அப்படிப் பார்க்கத் தேவையில்லை என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.

"தமிழ் இங்கிருந்து வந்ததாகவும் சமஸ்கிருதம் வெளியில் இருந்து வந்ததாகவும் சொல்லி, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதமும் தமிழும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. இரு மொழிகளுக்கும் இடையில் ஒரு நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பவர்கள் மொழியியலாளர்கள் அல்ல. அவர்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் சார்ந்து அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆகவே இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலத் தொடர்ச்சி இருக்கிறது" என்கிறார்கள்.  "கல்வெட்டுகளைப் பொறித்த மன்னர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த சுழற்சி ஆண்டைக் குறிப்பிட்டாலும் சக ஆண்டு, சாலிவாகன ஆண்டு போன்ற பிற ஆண்டுகளையும் சேர்த்தே குறிப்பார்கள். இதனால், அவர்கள் எந்த வருடத்தைச் சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பதிப்பாளர்களாக இருந்தவர்கள், தங்கள் புத்தகங்களில் கிரிகேரியன் ஆண்டையோ, வேறு ஆண்டையோ குறிக்காமல், வெறும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார்கள்.

ஆனால், காலத்தைக் குறிப்பிட தங்களுக்கென தொடர்ச்சியான ஒரு ஆண்டு முறையை தமிழர்கள் ஏன் உருவாக்கவில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

Coutesy : BBC

Saturday, March 22, 2025

மெ(மே)ன்மை நாயகன் - காதல் மன்னன் ஜெமினி!!!




காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து   சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ஒரு குழந்தையோடு வருவார்.

இதுபற்றி தெரியவர, இதயம் பலஹீனமான இரண்டாவது மனைவியிடம் முதல் மனைவி வரலாற்றைப் பற்றிச் சொன்னால் அவர் குழந்தையை விட்டுவிட்டு இறந்து விடுவாரோ என்ற பயத்தில் இரு மகன்களுக்கு தந்தையாய் தவிப்பார். 

அதைவிட இன்னும் கொடுமையாக,  தான் உயிரோடு இருப்பதையே முதல் மனைவியிடம் சொல்ல முடியாமல் நண்பர் பாலு என்கிற சிவாஜியின் அன்பு கட்டளையால் தடை விதிக்கப்பட்டு நிறுத்தப்படுவார்.

தமிழ் சினிமா கண்ட எண்ணற்ற ஆச்சரியமான பாத்திரங்களில் ஒன்று,  பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி கணேசன்ஏற்றிருந்த வேலு பாத்திரம். 

எல்லாவற்றையும் விட இரு ஆண்களுக்கு இடையிலான நட்பின் ஆழத்தை, வலிமையை எப்பேர்ப்பட்ட சூழலிலும் யாராலும் தகர்க்க முடியாது என்பதை மிக அற்புதமாக கட்டிய முதல் சமூக தமிழ் திரைப்படம். 

காட்சிக்கு காட்சி  ஜெமினியிடம் நடிப்பில் ஒரு படி விழாமல் இருக்க வேண்டுமே என்ற தவிப்பை நடிகர் திலகத்துக்கே உருவாக்கி இருப்பார் ஜெமினிகணேசன்..

மற்ற முன்னணி நடிகர்களுக்கு இல்லாத ஒரே ஒரு சிறப்பம்சம் ஜெமினியிடமிருந்தது. 

தனித்து கதாநாயகன் என்றால் மிஸ்ஸியம்மா, பூலோக ரம்பை சதாரம், மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், வஞ்சிக்கோட்டை வாலிபன், கல்யாண பரிசு என பட்டையை கிளப்பி இருப்பார். 

ஆடிப்பெருக்கு, தேனிலவு கைராசி, பாக்கியலட்சுமி, கற்பகம், ராமு போன்ற படங்களில் அலட்டலே இல்லாமல் மென்மையான கதாநாயகனாக தன்னை வெளிப்படுத்திய விதம் பார்த்தவர்களுக்கு மட்டுமே பளிச்செனவும் புரியும்..

இன்னொரு டாப் ஸ்டாருடன் இணையான பாத்திரம் என்றாலும் துவண்டுவிடாமல்  அதிலும் துவம்சம் செய்து விடுவார் ஜெமினி.

அதிலும் நடிகர் திலகம் சிவாஜியுடன் என்றால்,பதிபக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாவமன்னிப்பு.. அது ஒரு பெரிய பட்டியல். 

ஆனால் எம்ஜிஆருடன் முகராசி என்ற ஒரே படத்தில் மட்டுமே ஜெமினியால் நடிக்க முடிந்தது. எம்ஜிஆரை விட மூன்று வயது இளையவரான ஜெமினி அந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்தார்.

1940களில் அறிமுகமாகி 2000-க்கு மேலும் நடித்து, நீண்ட நெடிய திரை வரலாற்றுக்குச் சொந்தக்காரர், ஜெமினி என்கிற ஜாம்பவான்.

அவ்வை சண்முகியில் ஐயர் மாமி வேடத்தில் வரும் கமலஹாசனை பார்த்து உருகுவதையும், மேட்டுக்குடி படத்தில் கார்த்தி கவுண்டமணியுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதையும் பார்த்து ரசித்த இந்த தலைமுறைக்கு காதல் மன்னன் என போற்றப்படும்  ஜெமினியின் ஆரம்பகால வரலாறு எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படித்தது பிஎஸ்.சி., கெமிஸ்ட்ரி. ஆனால் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு பிறகு, செய்ததோ ஜெமினி ஸ்டுடியோசில் புதுமுகத்திற்காக நடிகர்களை தேர்வு செய்யும் பணி. 

அதனால்தான் ராமசாமி கணேசன் என்பவர், ஜெமினி என்ற அடையாளத்துடன் ஜெமினி கணேசனானார்.

சிவாஜியை போல் முதல் படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டாமல், எம்ஜிஆரை போலவே துண்டு துண்டு ரோல்களில் தலைகாட்டி கடுமையாக போராடியவர் ஜெமினி.

1947ல் மிஸ் மாலினி படத்தில் சின்ன ரோலில் அறிமுகமான ஜெமினிக்கு கதாநாயகன் ரோல் உடனே கை கூடி விடவில்லை. ஆனால் கதாநாயகியான அப்போதைய முன்னணி நடிகை புஷ்பவள்ளியையே காதலால் ஸ்வாகா செய்து துணைவியாக்கிக்கொண்டார் . 

அலுமேலு என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே மணந்து பெண் குழந்தைகளை பெற்றிருந்த நிலையில்தான் இப்படி புஷ்பவள்ளி வந்து இணைந்தார்.

1952ல் ஆர்.எஸ். மனோகர் கதாநாயகனாக நடித்த தாய் உள்ளம் படத்தில் ஜெமினி கலக்கிய வில்லன் ரோல்தான் அவர் திரையுலக வாழ்க்கையில் டர்னிங் பாயிண்ட்.

அதே ஆண்டு துவங்கிய மனம்போல் மாங்கல்யம் படத்திலோ, முதன் முறையாக கதாநாயகன் வேடம்.. விடுவாரா? நடிப்பில் அசத்தினார்.

இன்னொரு பக்கம் படத்தின் கதாநாயகியான 16 வயது மைனரான சாவித்திரி ஏற்கனவே இரண்டு பேரை மணந்த ஜெமினியிடம் மனதைப் பறிகொடுத்தார். படப்பிடிப்பின்போதே காதல் வலை வீசி கரம் பிடித்தார்.

ஜெமினி-சாவித்திரி விவகாரத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் மிகமிக ரகசியமாகவே இருந்திருக்கிறது.

ஒரு விளம்பர ஒப்பந்தத்தில் சாவித்திரி கையெழுத்து விடும்போது சாவித்திரி கணேஷ் என்று கையத்திட்டபோது தான் வெளியே தெரிய வந்திருக்கிறது.

இதனிடையே  2-வது மனைவி புஷ்பவள்ளி, ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொடுத்தார். இந்த குழந்தைதான் வளர்ந்து ரேகா என பெயர் பெற்றுபின்னாளில் இந்தி திரைலயுலக கனவுக்கன்னியாக திகழ்ந்தது.

இந்த சூழலுக்கு மத்தியில்தான்  தொடர்ந்து கதாநாயகனாக நடித்து , ஆக்சன் ஹீரோ எம்ஜிஆருக்கும் நடிகர் திலகத்துக்கும் நடுவில் காதல் மன்னனாக அற்புதமாக வெற்றிக்கொடி நாட்டினார் ஜெமினி.

காலங்களில் அவள் வசந்தம்.. மயக்கமா கலக்கமா,..

மன்னவனே அழலாமா.. 

நிலவே என்னிடம் மயங்காதே…

என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்று வரை ஜெமினியை ரசிகர்கள் மத்தியில் தாலாட்டத் தவறுவதேயில்லை.. 

ஜெமினியை பொறுத்தவரை எந்த பிரபல நடிகருடனும் சேர்ந்த நடிக்க தயங்காதவர்.. கொடுத்த பாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்துவிட்டு போகக்கூடியவர்.

வல்லவனுக்கு வல்லவன் படத்தில் அசோகனுக்கு எதிராக வில்லன், சித்தி படத்தில் எம்ஆர் ராதா- பத்மினி ஜோடிக்கிடையே ஒரு சிறிய பாத்திரம்.. ஜெய்சங்கரின் நூற்றுக்கு நூறு படத்தில் காலேஜ் பிரின்சிபல் ரோல்.. முத்துராமனின் சுடரும் சூறாவளியில் பொறுப்பற்ற குடிகார சூதாடித் தந்தை ரோல்..இப்படி நிறைய உண்டு..

சோகம் என்னவென்றால், இத்தகைய சமரசமே அவருக்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் என்ற நிலையிலிருந்து இறக்கி விடுவதற்கான வழியாகவும் அமைந்து விட்டது..

இடையில் நடந்த ஒரு ஆறுதலான விஷயம், ஜெமினி ஆரம்பகட்ட மற்றும் இறுதி கட்டத்திற்கு இடையிலான திரை வாழ்க்கையை  இயக்குனர் கே.பாலச்சந்தர் அற்புதமாக செதுக்கியதுதான் 

பூவா தலையா, தாமரை நெஞ்சம், காவியத்தலைவி, இரு கோடுகள் புன்னகை, வெள்ளி விழா என கேபி- ஜெமினி காம்பினேஷனில் பல படங்கள் கிளாசிக் ரகமாகவே அமைந்தன.

1974-ல் தான் சொந்தமாக தயாரித்த நான் அவனில்லை படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வந்து பெண்களை மணந்து ஏமாற்றி செல்லும் பாத்திரத்தில் அவரது நடிப்பு அசத்தல் ரகம்..

ஜெமினி-KB - கமல் என்ற மூன்று ஆளுமைகளுக்குமே ஏதோ ஒரு வகையில் பிணைப்பு உண்டு. 'உன்னால் முடியும் தம்பி' படம் வரை வரை அந்த இணைப்பு தொடர்ந்தது.  

கமலின் முதல் படம் ஜெமினியின் களத்தூர் கண்ணம்மா.. அன்று முதலே அவர் கமலை தனது பிள்ளைபோலவே கருத ஆரம்பித்தார்.. பார்த்தால் பசிதீரும் படத்திலோ ஜெமினியின் இரட்டை குழந்தைகளாக கமலுக்கு முதன்முறையாக  டூயல் ரோல் வேடம்.. 

பெற்றெடுக்காத பிள்ளை ஜெமினியால் குறிப்பிடப்பட்ட  கமலும், பெற்றடுத்த ரேகாவும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள்.. இன்றுவரை பொலிவு மங்காதவர்கள்..

மண வாழ்க்கையை பொருத்தவரை  ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை பின்பற்றாதவர் ஜெமினி.

ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் மண வாழ்க்கை நடத்தினாலும் சமூகத்திடமிருந்து  எதையும் மறைக்கவில்லை. 

அவர் தன்னுடைய எந்த வாரிசையும் சரியாக பராமரிக்க தவறியதில்லை. 

அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி நன்றாகப் பழகி விளையாடி பெரிய அளவில் படிக்க வைத்தார். சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து தன் வாரிசுகளுக்கு பொருளாதார பாதுகாப்பு ஏற்படுத்தி வைத்தார்.

நம்மைப் பொறுத்தவரையில் ஃபேவரைட் படங்கள் என்றால், மிஸ்ஸியம்மா, பார்த்தால் பசி தீரும், ஆடிப்பெருக்கு, கைராசி, வாழ்க்கைப் படகு, நான் அவன் இல்லை போன்றவை.   

திரை உலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் 20- ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

Monday, April 8, 2024

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....



Photo courtesy NBC news

வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, ​​அது சூரியனை மறைப்பதால்,  நாம் கிரகணத்தைக் காண்கின்றோம்.

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  அந்த வகையில், ஏப்ரல் 8 ஆம் தேதி அரிய முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது.  இந்த  சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழும் என்பதால், இந்தியாவில் அதனை பார்க்க முடியாது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த அரிய  முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். 

கிரகணத்தின் போது அறிவியல் நிறைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்புகள்..

1919ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு,முழு சூரிய கிரகணத்தின் போதுதான் ஆர்தர் எடிங்டன் எடுத்த புகைப்படத்தின் மூலம் தான் உறுதிப்படுத்தப்பட்டது.

1866 - சூரிய கிரகணத்தைப் பதிவு செய்யும் போது ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திர கிரகணத்தின் போது பூமியில் வளைந்த நிழலைப் பார்த்த பிறகுதான்,  அரிஸ்டாட்டில் பூமி தட்டையானது அல்ல, வட்டமானது என்பதை நிரூபித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Monday, December 13, 2021

அடுத்த ஜென்மத்திலாவது குவைத் பிரஜையாக இருக்கோணும் சாமியோவ்!!!!

நீங்கள் குவைத் நாட்டு குடிமகனாக  இருந்தால்....





குவைத் நாட்டில் 45 லட்சம் ஜனத்தொகை.. அதில் குடிமக்கள் 10 லட்சம்தான். மீதமுள்ளவர்கள் குடியேறிகள்.


பெட்ரோல் பணம் புழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் ஜம் என இருக்கும். அதை அப்படியே மக்களுக்கு செலவு செய்து புரட்சி எதுவும் வராமல் பார்த்துக்கொள்கிறது குவைத்.

குவைத் தினார் ஒன்று 250 ரூ. தனிநபர் வருமானம் அடிப்படையில் உலகிலேயே எட்டாவது நாடு

குடிமகன்கள் மட்டுமே அரசுவேலை பார்க்கமுடியும். அரசு வேலை இல்லை என்றால் குவைத்தில் கம்பனி ஆரம்பிக்கும் அனைவரும் குவைத்திகளை வேலைக்கு எடுக்கவேண்டும். அதுவும் சாதா வேலை அல்ல. டைரக்டர், மேனேஜர்..இப்படி பெரிய பதவிகளுக்கு எடுக்க வேண்டும்.

பல கம்பனிகளில் குவைத்திகளை வேலைக்கு எடுத்தபின் அதே வேலைக்கு ஒரு வெளிநாட்டவரையும் எடுத்துவிடுவார்கள். காரணம் குவைத்தி அதன்பின் ஆபிசுக்கு வரமாட்டார். அவரது வேலையை குடியேறி தான் செய்யணும். குவைத்திக்கு சம்பளம் தவறாமல் போய்விடும். அவரை டிஸ்மிஸ் எல்லாம் செய்யவே முடியாது.

கல்யானம் செய்துகொன்டால் திருமண பரிசாக அரசே வீடுகட்ட சொந்த வீடு வாங்க 60,000 தினார்களை வழங்கும் (சுமார் 1.5 கோடி:-). அதுக்கு மேல் பெரிய வீடாக வாங்கவேண்டுமெனில் வட்டியில்லா கடன் கிடைக்கும். பெட்ரோல் விலை உயர்ந்து நாட்டின் வருமானம் அதிகரிக்கும் ஆண்டுகளில் முழு கடனையும் தள்ளுபடி செய்துவிடுவார்கள்.




மருத்துவசெலவு இலவசம் மட்டுமல்ல. குவைத்தில் சிகிச்சை பெறமுடியாத அளவு சிக்கலான வியாதி என்றால் நாம் விரும்பும் நாட்டுக்கு போய் சிகிச்சை பெறலாம். அதற்கான மருத்துவ செலவு அரசினுடையது. அதுமட்டும் அல்ல நம்முடன் இருவரை கூட்டி செல்லலாம். அவர்களின் செலவும் அரசினுடையது

கல்வி இலவசம். வெளிநாட்டில் போய்கூட படிக்கலாம். அரசின் செலவுதான். தவிர வெளிநாட்டில் தங்கிபடிக்க மாதம் ஒன்றுக்கு $2000 கூட அரசே வழங்கும்.

மின்கட்டனம், தண்ணீர் பில் எல்லாம் பெயரளவுக்குதான். அதைகூட பலரும் கட்டமாட்டார்கள். அதை அரசு அவ்வபோது தள்ளுபடி செய்துவிடும்.

வீட்டுக்கு வீடு பிலிப்பினோ வேலைகாரர்கள் இருப்பார்கள். பாகிஸ்தானி, இந்திய டிரைவர்கள். வேலைக்காரரும், டிரைவரும் இல்லாத வீடுகள் இல்லை. 

ஆனால் நாட்டில் செய்யகூடாத ஒரே தவறு அமீர் (மன்னரை) விமர்சிப்பதுதான். சும்மா இருக்காமல் ட்விட்டரில் மன்னரை, அரசை விமர்சித்தவர்களை பிடித்து ஜெயிலில் போட்டு இருக்கு குவைத்

குவைத் குடிமகன் எப்படி ஆகணும்னு கேட்ககூடாது :-) இத்தனை சலுகைகள் இருக்கையில் எப்படி அவர்கள் மற்றவர்களை குடிமக்கள் ஆக்குவார்கள்? உலகிலேயே கிடைப்பதற்கு அரிய பாஸ்போர்ட் குவைத்தி பாஸ்போர்ட்தான். குவைத்திக்கு பிறப்பதுதான் குவைத் குடிமகன் ஆவதற்கு ஒரே வழி.

குடிமக்களுக்கு தான் இத்தனை சலுகையும். வேலைக்கு போனால் இது எல்லாம் கிடையாது :-)


Tuesday, October 5, 2021

இவர்கள் நினைப்பது நடக்கக் கூடாது...நடக்கவே கூடாது!!!!

 மூன்றாவது அலை வரக்கூடாது


இவர்கள் நினைப்பது நடக்கக்கூடாது 


ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து, கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godown ல் குவித்து வைத்துள்ளார்கள். 


செப்டம்பரில் 3 வது அலை வரும் என்று கணித்தார்கள். ஆனால் அது அக்டோபர்- நவம்பருக்கு தள்ளிப்போவது போல் தெரிகிறது. 


இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.


ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).   





தற்போது மிகத்தரமான 3 Ply Mask எல்லாம் ரூபாய் 1.30 க்கு கிடைக்கிறது. இதை கடந்த ஜூன் - ஜூலையில் 2/- ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். 


International Standard N95 எல்லாம் ரூபாய் 10/- க்கும் கீழே போய்விட்டது. வெறும் 5/- ரூபாய்க்கெல்லாம் ஓரளவு ஒத்துக்கொள்ளக்கூடிய தரத்திலே N95 கிடைக்கிறது. 


தற்போது Pulse Oxymeter வெறும் 250/- ரூபாய்க்கும் கீழே சென்று, 2 மாதங்களுக்கு முன்பு 350/- ரூபாய் கொடுத்து வாங்கியவர்களை பரிகாசம் செய்கிறது.


உச்சகட்ட கொடுமை என்பது எல்லா Surgical ம், குறைந்தது ஒரு Oxygen Concentrator ஆவது கையிருப்பாக வைத்திருக்கிறார்கள்.  எனக்கு தெரிந்து இனி அது புதிதாய் யாருக்கும் தேவைப்படாது. மொத்தமாக ரூபாய். 50,000/- முதல் 75,000/- வரை முதலீடு செய்திருக்கிறார்கள்.


47 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டர் ரூபாய் 13,000/- லிருந்து தற்போது வெறும் 9,000/- க்கு கீழே போய்விட்டது. 


----

2 ஆம் அலை முடிந்ததில் இருந்து தற்போது வரையிலே, இவ்வளவு விலை குறைவு நடந்திருக்கிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் Importers அதிகமாகிவிட்டார்கள். 


3 ஆம் அலை மட்டும் வரவில்லையெனில், எங்கள் கதை கந்தலாகிவிடும் என்று வெளிப்படையாகவே புலம்புகிறார்கள்...

-----

இப்படி எல்லோரும் Stock Maintenace என்கிற பெயரில் பெரும்பணத்தை பொருட்களின் மீது முடக்கியதால், மற்ற மருத்துவப்பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு Payment என்பது வருவதே அபூர்வமாகிவிட்டது. Liquid Cash என்பதே துடைத்து போட்ட மாதிரி இருக்கிறது. 


அனைத்து வர்த்தகர்களும் மிகவும் நம்பியிருப்பது தசரா & தீபாவளி பண்டிகைகளைத்தான். எல்லோரும் கும்பலாக ஒன்றாய் கூடுவார்கள், குறுக்கே, நெடுக்குமாய் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். நம் ஊர் பண்டிகைகளால் மட்டுமே கொரோனாவை மீண்டும் கொண்டு வந்து நம்மை வாழ வைக்க முடியும் என்று தீவிரமாய் நம்புகிறார்கள்..


இதற்கு நாம் இடம் கொடுத்து விடாதீர்......


முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்லாதீர் இந்த 2021ஆண்டு இறுதிவரை.....*

Thursday, September 2, 2021

திருமலை திருப்பதியில் ஸ்ரீவாரி தன பிரசாத திட்டம் துவக்கம்..


திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள்,  சில்லறை நாணயங்களை செலுத்தி வருகின்றனர். இந்த சில்லறைகளை ஏழுமலையானின் தன பிரசாதமாக பக்தர்களுக்கே வழங்கும்  திட்டத்தை தேவஸ்தானம் புதிதாக தொடங்கியுள்ளது. உண்டியல் மூலம் தினசரி ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை சில்லறைகள் கிடைக்கின்றன. ரூபாய் நோட்டுகள் மட்டும் வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது. சில்லறைகளை  வங்கிகள் வாங்க முன்வராததால், தேவஸ்தானத்தின்  பாதுகாப்பில் அவை குவிக்கப்பட்டுள்ளன.  



இதனால், இந்த  சில்லறைகளை ரூபாய் நோட்டுகளாக மாற்றவே, ‘தன பிரசாதம்’ திட்டத்தை தேவஸ்தானம் இன்று முதல் தொடங்குகிறது.  அதன்படி, தேவஸ்தான ஓய்வறைகளுக்கு பக்தர்களிடம் இருந்து ஒரு அறைக்கான வாடகை கூடுதலாக முன்பணமாக பெறப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்துக்குப் பிறகு அறைகளை காலி செய்து செல்லும்போது, இனிமேல் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் இன்று முதல் சில்லறைகளாக சிறிய மூட்டைகளில் வழங்கப்பட உள்ளது. உண்டியலில் சில்லறை தொடர்ந்து குவிந்தால், கூகுள் பே போன்ற ஆப்கள் மூலம் காணிக்கை செலுத்தும் திட்டத்தை கொண்டு வர பரிசீலிக்கப்படுகிறது....

இன்று எந்த செய்தியும் இல்லை....

நாம் வழக்கமாகக் கேட்கும் / பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸூமே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்ப...